‘டெதர்’ – 23வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் உலக சினிமா பிரிவில் போட்டியிடும் பாராட்டுகளை குவித்த ஹாலிவுட் திரைப்படம்




‘டெதர்’ – 23வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் உலக சினிமா பிரிவில் போட்டியிடும் பாராட்டுகளை குவித்த ஹாலிவுட் திரைப்படம்
அமெரிக்காவில் வசிக்கும் சென்னையை சேர்ந்த தமிழர் ஹரிஹரசுதன் நாகராஜன், ‘டெதர்’ மூலம் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் முத்திரை பதித்துள்ளார்
ஹாலிவுட் சுயாதீன திரைப்படமான ‘டெதர்’, 23வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் (CIFF) உலக சினிமா போட்டிக்கு அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ஹரிஹரசுதன் நாகராஜன் தயாரித்து இயக்கியுள்ளார்.
சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் இரு முறை திரையிடப்படுகிறது. டிசம்பர் 14 அன்று காலை 10:00 மணிக்கு சத்யம் சினிமாஸ் சீசன்ஸ் அரங்கிலும் டிசம்பர் 18 அன்று காலை 9:45 மணிக்கு ஐநாக்ஸ் சிட்டி சென்டரில் ஸ்க்ரீன் 1லும் ‘டெதர்’ திரையிடப்படும்.
அங்கஸ் ஹூவோராஸ் எழுத்தில் ஹரிஹரசுதன் நாகராஜன் இயக்கி தயாரித்துள்ள ‘டெதர்’, பள்ளியில் நடைபெறும் துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் விளைவுகளை ஆராய்கிறது. மகளின் இழப்பால் துக்கத்தில் தவிக்கும் ஒரு குடும்பம், மருத்துவ ரீதியாக மனச்சோர்வடைந்த முன்னாள் பள்ளி அதிகாரி, ஆபத்தை எதிர்கொள்ளும் 15 குழந்தைகளை காப்பாற்ற முடியாமல் உறைந்து நிற்பது என இக்கதை சுழல்கிறது.
பெரிதும் மதிக்கப்படும் டான்ஸ் வித் பிலிம்ஸ்: லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விழாவில் முதலில் திரையிடப்பட்ட ‘டெதர்’ அங்கு பெரிதும் பாராட்டப்பட்டது. ‘டெதர்’ திரைப்படம் சென்னையில் திரையிடப்படுவது குறித்து இயக்குநர் ஹரிஹரசுதன் நாகராஜன் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
திரைப்பட உருவாக்கத்திலும் உணர்ச்சிப்பூர்வமான கதைசொல்லலிலும் தீவிர ஆர்வம் கொண்ட ஹரிஹரசுதன் நாகராஜனின் முதல் படமான ‘டெதர்’ அமெரிக்க ஊடகங்களால் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. மதுமிதா இயக்கும் படத்தில் கூடுதல் திரைக்கதை எழுத்தாளராக ஹரிஹரசுதன் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிடிஎம் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள ‘டெதர்’ திரைப்படத்தில் நிக் கீட்ரிஸ், பென் பர்டன், லாரா ஃபே ஸ்மித், ஜோனா கிரெட்டெல்லா, சோபியா டாசன் மற்றும் ஏரியல் ஜேம்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர். நிக் வாக்கர் ஒளிப்பதிவு செய்ய, அலெஜாண்ட்ரா ஆர்மிஜோ படத்தொகுப்பை கையாள, காசி ஹோவெல் தயாரிப்பு வடிவமைப்புக்கு பொறுப்பேற்க, டாரில் ஜான் ஹன்னன் இசையமைத்துள்ளார். ஒலி வடிவமைப்பு: நாதன் ரூய்ல், தயாரிப்பு: நிக்கோல் வு.
***



