CinemaHome

‘பாட்ஷா ‘- ‘பறந்து போ’- ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ – படங்களுக்கு வழங்கப்பட்ட 7 ஸ்டார் விருது 2025 !

‘பாட்ஷா ‘- ‘பறந்து போ’- ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ – படங்களுக்கு வழங்கப்பட்ட 7 ஸ்டார் விருது 2025

தமிழ் திரையுலகில் முதன் முதலாக வெள்ளித்திரை -சின்னத்திரை- டிஜிட்டல் திரை- ஆகிய திரையுலகில் வெளியான தரமிக்க படைப்புகளையும் , கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிக்கும் வகையில், 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் ஆட் ஃபிலிம் ஏஜென்சி நிறுவனத்தின் உரிமையாளர் – தலைமை நிர்வாக அதிகாரி ராஜ் ஈஸ்வர் மற்றும் ரோகிணி சினிமாஸ் ஆகியோர் இணைந்து சாதனை படைத்த வெற்றியாளர்களுக்கு ‘ 7 ஸ்டார் அவார்ட்ஸ் 2025 ‘ எனும் விருதினை வழங்கி கௌரவிக்க தீர்மானித்தனர். இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்டமான கலை விழாவில் தமிழ் திரையுலகத்தை சார்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த விருது வழங்கும் நிகழ்வில் 2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த இயக்குநர் – சிறந்த ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட வழக்கமான விருதுடன் ரீ ரிலிஸ் அவார்ட்- பெஸ்ட் ஸ்டோரிடெல்லர் அவார்ட் – பெஸ்ட் ட்ரெண்ட் செட்டர் தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ் அவார்ட் – பிளாக் பஸ்டர் மூவி அவார்ட்- ஐகானிக் காமெடியன் ஆஃப் தமிழ் சினிமா – டிரிபியுட் அவார்ட் ஆகிய பிரிவுகளிலும் விருதுகள் வழங்கப்பட்டது. அத்துடன் தொலைக்காட்சி – இணைய தொடர் – ஆகியவற்றிலும் சிறந்து விளங்கும் படைப்புகளுக்கும், கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து டிஜிட்டல் துறையில் தாக்கத்தை ஏற்படுத்திய பிரபலங்களுக்கும் பிரத்யேக விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என ரசிகர்களின் உற்சாகமான பங்களிப்புடன் நடைபெற்ற இந்த விருது வழங்கும் நிகழ்வில் இயக்குநர்கள் சுரேஷ் கிருஷ்ணா- விக்னேஷ் சிவன்- ராம் -அஸ்வத் மாரிமுத்து- அபிஷன் ஜீவந்த் – நடிகர்கள் சௌந்தர்ராஜா, மகாநதி சங்கர் – ஹர்ஷத் கான்- டி டி எஃப் வாசன் – இந்திரஜா ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பெஸ்ட் ரீ ரிலீஸ் ஆடியன்ஸ் ஃபேவரைட் 7 ஸ்டார் அவார்ட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘பாட்ஷா’ படத்தை இயக்கிய இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவிற்கு வழங்கப்பட்டது.

விருதை பெற்றுக் கொண்டு இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா பேசுகையில், ” வாழ்க்கையில் ஒரே ஒரு சூப்பர் ஹிட் படத்தை இயக்குவதே பெரிய விசயம். ஆனால் ‘அண்ணாமலை’, ‘வீரா’, ‘பாட்ஷா’, ‘சத்யா’, ‘இந்திரன் சந்திரன்’, ‘ஆள வந்தான்’ என என்னுடைய பட்டியலில் இருக்கும் போது ரசிகர்களின் பேரன்பு அதிகம்.

‘பாட்ஷா’ படத்தை பற்றி அன்றே பாடலில் குறிப்பிட்டிருக்கிறோம். ‘ஒரே ஒரு சூரியன் தான்.. ஒரே ஒரு சந்திரன் தான்… ஒரே ஒரு பாட்ஷா தான்… ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான்… ‘. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 75 வயதாகும் போது சினிமாவில் 50 வது ஆண்டை நிறைவு செய்திருக்கிறார் .அவருடைய திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் ‘பாட்ஷா’. இந்த திரைப்படத்தை மறு வெளியீடு செய்த போது 1995 ஆம் ஆண்டில் ‘பாட்ஷா’ முதன்முதலாக வெளியான போது திரையரங்கத்தில் எப்படி வரவேற்பு இருந்ததோ… அதேபோல் இப்போதும் இருந்தது.

பாட்ஷா படத்தின் முதல் பாதி முழுவதும் மாணிக்கமாக நடிக்கும் காட்சிகளை முழுவதுமாக படமாக்கி விட்டோம். ஆனால் பாட்ஷா என்றொரு கதாபாத்திரம் இருக்கிறது. முதல் பாதியில் பாட்ஷா என்ற ஒரு கதாபாத்திரத்தை குறித்த எதிர்பார்ப்பை எகிற வைத்திருந்தோம்.

இரண்டாம் பாதியில் ஹைதராபாத்தில் முதல் காட்சி பாட்ஷா கெட்டப்பில் படமாக்க பட வேண்டும். அந்த நாள் என்னால் மறக்கவே முடியாது. கோல் கொண்டா பகுதியில் படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினர் அனைவரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்காக காத்துக் கொண்டிருந்தோம். சொன்ன நேரத்திற்கு சரியாக வரும் பழக்கம் கொண்ட ரஜினிகாந்த் படப்பிடிப்பு வருவது தாமதமானதால் அவரை சந்திப்பதற்காக நான் அவர் தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு சென்றேன். பாட்ஷா கதாபாத்திரத்திற்கான மேக்கப் செய்து கொண்டு அறையின் வெளிச்சத்தை குறைத்துக் கொண்டு ஒரு நாற்காலியில் அமைதியாக உட்கார்ந்து இருந்தார். நான் அவரை பார்த்து வணக்கம் சொன்ன போதும் அதனை கண்டும் காணாமல் அமைதியாக இருந்தார். அங்கும் இங்குமாக நடந்தார். பிறகு கோட் அணிந்தார். அதன் பிறகும் அங்கும் இங்குமாக நடந்து கொண்டே இருந்தார். கழுத்திற்கு ஒரு மஃப்ளரை அணிந்து கொண்டார். அப்போது ஒப்பனைக் கலைஞர் சுந்தரமூர்த்தி ரிம் இல்லாத ஒரு கண்ணாடியை கொடுத்து அணிந்து பார்க்க சொன்னார். அதை அணிந்த பிறகு அங்கும் இங்கும் நடந்து பார்த்து விட்டு ஒரு ஸ்டைலை செய்து பார்த்தார். பத்து நிமிடமாக இந்த முயற்சியும் , பயிற்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன் பிறகு என்னை பார்த்து ‘ஓகே ‘என அவருடைய ஸ்டைலில் கேட்டார். அந்தத் தருணம் தான் பாட்ஷா உதித்தார்.

இடைவேளை காட்சிக்கு முன்னர் ரஜினிகாந்த் எல்லாரையும் அடித்துப் போட்டுவிட்டு ‘ஒருவாட்டி சொன்னா நூறு வாட்டி சொன்ன மாதிரி..’ என டயலாக் இருந்தது. ஆனால் அதனை சொல்லும் போது ஏதோ இடையூறாக இருப்பதாக ஃபீல் செய்தார். அந்தக் காட்சி படமாக்கும் முன்னர் சூப்பர் ஸ்டார் என்னை அழைத்து ஒரு வாட்டி என்பது பெட்டரா? அல்லது ஒரு தடவை என்பது பெட்டரா? என கேட்டார். அப்புறம் யாரிடமும் சொல்லாதீர்கள். காத்திருங்கள் என சொல்லிவிட்டார். காட்சி படமாக்கும் போது ‘ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி ..’ என தனக்கே உரிய ஸ்டைலில் அந்த டயலாக்கை பேசினார். அந்தக் காட்சி ஓகே ஆனவுடன் படக்குழுவினர் அனைவரும் அவருக்கு அருகே வந்து பாராட்டு தெரிவித்தனர். படப்பிடிப்பில் இருந்த ஊழியர் ஒருவர் இதை டயலாக்கை சொன்னவுடன் இந்த டயலாக் ஹிட்டாகி விடும் என்பது உறுதியானது. இது சாதாரண டயலாக் தான். ஆனால் சூப்பர் ஸ்டார் சொல்லும்போது அதன் மதிப்பே தனி.

அண்ணாமலை படத்தின் ரீ ரிலீஸ் விரைவில் நடைபெறும். ஆனால் அண்ணாமலை படம் அமெரிக்கா பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் ரீ ரிலீஸ் ஆகிவிட்டது.

‘அண்ணாமலை’, ‘பாட்ஷா’, ‘வீரா’ ஆகிய படங்களில் பணியாற்றிய அனுபவத்தை வைத்து நான் ‘பாட்ஷாவும் நானும்’ என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டு இருக்கிறேன். புத்தகத்தை வாங்கி படித்து ரசித்து மகிழுங்கள். ” என்றார்.

இதனைத் தொடர்ந்து இயக்குநர் – தயாரிப்பாளர் – பாடலாசிரியர் – நடிகர் – தொழில் முனைவோர் – என ஏழு பிரிவில் தனித்துவமாக திகழும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு 7 ஸ்டார் விருது வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஜென் ஜீ ஆடியன்ஸின் பெஸ்ட் ட்ரெண்ட் செட்டர் ஆஃப் தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ் 2025 எனும் 7 ஸ்டார் விருதை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து பெற்றார்.

விருதினை பெற்றுக் கொண்ட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து பேசுகையில், ” டிராகன் – ஜென் ஜீ படம் அல்ல. 90′ ஸ் கிட்ஸ்களுக்கான படம். அதை இந்த தலைமுறையினரும் ரசிக்கும் வகையில் கொடுத்திருக்கிறோம். படத்தில் அப்பா சென்டிமென்ட் அம்மா சென்டிமென்ட் இருக்கும். எல்லா தரப்பு ரசிகர்களையும் சென்றடைந்ததாக நான் உறுதியாக நம்புகிறேன். இந்த விருதை ரோகிணி சினிமாஸ் – செவன் ஸ்கிரீன் என்டர்டைன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்கியதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு திரைப்படம் திரையரங்குகளில் வெற்றி பெறுவதை தான் அனைத்து இயக்குநர்களும் விரும்புவார்கள். அதுதான் இயக்குநரின் கனவாகவும் இருக்கும். திரையரங்குகளில் தான் ரசிகர்களின் கைதட்டல் இயக்குநர்களுக்கு உத்வேகம் அளிக்கும் ” என்றார்.

2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த இயக்குநருமான விருதை டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இயக்குநரான அபிஷன் ஜீவந்திற்கு 7 ஸ்டார் விருது வழங்கப்பட்டது.

இயக்குநர் அபிஷன் ஜீவந்த் பேசுகையில், ” மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்திற்கு மக்கள் பெரும் ஆதரவை வழங்கினார்கள். படப்பிடிப்பு நடைபெறும் போது நடிகை சிம்ரன் எப்போதும் தான் ஒரு சீனியர் ஆர்டிஸ்ட் என்பதை வெளிப்படுத்த மாட்டார்கள். அவர்களுக்கு நிறைய விசயங்கள் தெரியும் என்றாலும், அந்த காட்சியின் போது இயக்குநரான நான் என்ன சொல்கிறேனோ.. அதை மட்டுமே கேட்டு நடிப்பார்கள். அவர்களின் அந்த அன்பும் எளிமையும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் இடம்பெற்ற எம் எஸ் பாஸ்கரின் கதாபாத்திரம் நான் என்னுடைய வாழ்க்கையில் சந்தித்த நபரின் பிரதிபலிப்புதான். எல்லா திரைப்படங்களும் நம்முடைய அனுபவத்திலிருந்து தான் உதிக்கும். இது என்னுடைய அடுத்தடுத்த படங்களிலும் தொடரும்” என்றார்.

2025 ஆம் ஆண்டில் சிறந்த அறிமுக நடிகருக்கான 7 ஸ்டார் ரைசிங் ஸ்டார் விருது ‘ஐ பி எல்’ படம் மூலம் தமிழில் அறிமுகமான ‘ரேசிங் ஸ்டார்’ டி டி எஃப் வாசனுக்கு வழங்கப்பட்டது.

விருதைப் பெற்றுக் கொண்டு நடிகர் டி டி எஃப் வாசன் பேசுகையில்,” என்னை நடிகராக அங்கீகரித்து ஏற்றுக்கொண்டு தொடர்ந்து அன்பு செலுத்தும் அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சினிமாவில் 2026 ஆம் ஆண்டில் என்னைத்தான் எனக்கு போட்டியாக கருதுகிறேன். 2026 ஆம் ஆண்டில் என்னிடமிருந்து நிறைய எதிர்பார்க்கலாம்” என்றார்.

இதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவின் ஐகானிக் காமெடியன் ஆஃப் தமிழ் சினிமா எனும் விருது மறைந்த நடிகர் ரோபோ சங்கருக்கு வழங்கப்பட்டது அவர் சார்பில் அவருடைய குடும்பத்தினர் இந்த விருதை பெற்றுக்கொண்டனர். இந்த விருதை நடிகர் சௌந்தர்ராஜா வழங்கினார்.

திருமதி பிரியங்கா ரோபோ சங்கர் பேசுகையில், ” என் கண்களில் வழிவது ஆனந்தக் கண்ணீர் தான். மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்காகத்தான் நம்மை அழைக்கிறார்கள் என அவர் அடிக்கடி எங்களிடம் சொல்வார். நான் அவருடன் இருந்த காலங்களை விட சௌந்தர் ராஜா மற்றும் சுட்டி அரவிந்துடன் இருந்த காலங்கள் தான் அதிகம்.

எங்களுடைய காதலுக்கு சௌந்தர்ராஜா தான் இறக்கை இல்லாத பறவையாக தூது சென்றவர். எங்கள் காதலுக்கு சுட்டி அரவிந்த் தான் விளம்பரதாரர். அவருடைய தயவில்தான் நான் என்னுடைய காதலருடன் போனில் பேச முடியும். அதனால் இவர்கள் இருவரும் தான் எங்களுடைய வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆயுள் முழுவதும் இவர்கள் எங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

2025 ஆம் ஆண்டு மோஸ்ட் இம்பேக்ட்ஃபுல் ஸ்டோரிடெல்லர் 7 ஸ்டார் அவார்ட் எனும் விருது ‘பறந்து போ ‘ எனும் திரைப்படத்திற்காக இயக்குநர் ராமுக்கு வழங்கப்பட்டது.

இது தொடர்பாக இயக்குநர் ராம் பேசுகையில், ” லக்கி பாய் விக்கி உடன் இருப்பது மகிழ்ச்சி. ரோகிணி சினிமாஸ் எனும் திரையரங்கத்தினர் விருது வழங்குகிறார்கள். பொதுவாக திரையரங்கத்திற்கு தான் நாங்கள் விருதுகளை வழங்கி இருக்கிறோம். முதன்முதலாக திரையரங்கம் சார்பில் கலைஞர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் முதல் முறையாக இந்த விருதினை வழங்குகிறது. இளம் தலைமுறையினர் ஒன்று சேர்ந்து இதனை தொடங்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு ஊக்கமளித்து வாழ்த்து தெரிவிப்பதற்காக இங்கு வந்தேன். ‘பறந்து போ’ திரைப்படத்திற்காக கிடைக்கும் முதல் விருது இது. நன்றி ” என்றார்.

இயக்குநர் ராமிற்கு விருது வழங்கிய தொழிலதிபர் காளீஸ்வரன் பேசுகையில், ” என்னுடைய மகள்கள் இயக்குநர் ராமின் ரசிகைகள். என் உடல் நலம் சரியில்லை என்றாலும் ராமிற்கு விருது வழங்க வேண்டும் என்பதற்காக இந்த விழாவில் கலந்து கொண்டேன்.

நான் வாசிக்க தொடங்கிய கால கட்டத்திலிருந்து நான் நேசித்த பெரிய மனிதர்கள் பலர் உள்ளனர். ஆனால் வயதான பிறகு நான் நேசிக்கும் முக்கியமான நபர் இயக்குநர் ராம். இவர் நலிந்து போன நாட்டுப்புற கலைகளுக்கு உயிர் கொடுக்கும் கலைஞர்களின் வாரிசுகளை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். மலைப்பகுதிகளில் கல்வியை இடைநிறுத்தம் செய்த குழந்தைகளை கண்டுபிடித்து ஒருங்கிணைப்பதில் பெரும் சவால் இருந்தது. ஆனால் ராம் இயக்கத்தில் வெளியான ‘பறந்து போ’ படத்தைப் பார்த்த பிறகு அந்தப் பணி எளிதாகிவிட்டது” என குறிப்பிட்டார்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசுகையில், ” இயக்குநர் ராம் என்னுடைய பத்தாண்டு கால நண்பர் மட்டுமல்ல என்னுடைய வழிகாட்டியும் கூட. அவருடைய அலுவலகத்தில் தான் நான் ‘நானும் ரவுடிதான்’ படத்தின் திரைக்கதையை எழுதினேன். அந்த படம் அவருடைய அலுவலகத்தில் தான் தயாரானது.

அவர் உருவாக்கிய படத்திலேயே பதட்டமே இல்லாமல் பார்த்து ரசித்த படம் தான் ‘பறந்து போ’. இந்தப் படத்திற்கு இதுதான் முதல் விருது என்றாலும் தொடர்ந்து பல விருதுகளை இந்தப் படத்திற்காக கிடைக்கும். ” என்றார்.

2025 ஆம் ஆண்டின் பெஸ்ட் சென்சேஷனல் சப்போர்ட்டிங் ஆர்டிஸ்ட் 7 ஸ்டார் விருது நடிகர் ஹர்ஷத் கானுக்கு வழங்கப்பட்டது.

விருதைப் பெற்ற நடிகர் ஹர்ஷத் கான் பேசுகையில், ” இந்த வருஷம் குட்டி டிராகன் எனும் மிகப்பெரிய விருதை கதாபாத்திரமாக கொடுத்தது எங்கள் இயக்குநர் அஸ்வத் தான். இந்த வருஷம் அவர் கையால் ஏதேனும் விருதினை வாங்கிட வேண்டும் என விரும்பினேன். இது அவருக்கு இன்னும் தெரியாது. இருந்தாலும் இந்த ஆண்டின் இறுதிக்குள் 7 ஸ்டார் விருதினை வாங்கியிருக்கிறேன். இதுவும் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது நன்றி” என்றார்.

இவர்களுடன் விஜய் டிவியின் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’, ஜியோ ஹாட் ஸ்டாரில் வெளியான ‘ஹார்ட் பீட்’ வெப் சீரிஸ், ‘பிக் பாஸ் 8 ‘என பல்வேறு சின்னத்திரை – டிஜிட்டல் திரை நட்சத்திரங்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் 7 ஸ்டார் விருது வழங்கப்பட்டது.

அத்துடன் ரோகிணி சினிமாஸ் நிறுவனம் ஒருங்கிணைப்பில் முன்னெடுக்கப்பட்ட குறும்படத்திற்கான போட்டிப் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த குறும்படத்திற்கும் விருதுகள் வழங்கப்பட்டது.

பொழுதுபோக்கு துறையில் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நிகழ்ச்சிகளுக்கும், கலைஞர்களுக்கும் விருது வழங்கும் வகையில் இந்த 7 ஸ்டார் விருது வழங்கும் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றதால் கலைத்துறையினரின் கவனத்தை கவர்ந்தது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button